Monday, April 21, 2025
Homeஇலங்கைஅனுராதபுரம், யாழ்ப்பாணம, கண்டி நகரங்கள் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி – பிரான்ஸில் பிரதமர் தெரிவிப்பு

அனுராதபுரம், யாழ்ப்பாணம, கண்டி நகரங்கள் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி – பிரான்ஸில் பிரதமர் தெரிவிப்பு


உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் என பிரான்சில் இடம்பெற்ற யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே, இலங்கையின் புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் முதலாம் திகதி ‘இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் 75 வருடங்களை அண்மிக்கும் தருணத்தில் யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே அவர்கள் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பிரதிபலனாக அனுராதபுரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறுகிறது.

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், கலாசாரங்களுக்கிடையிலான உரையாடல், மரபுரிமைகளை பாதுகாத்தல், கல்வி, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் இந்த மாநாடு கைகொடுக்கும்.
எதிர்கால சந்ததியினருக்கென கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை பலப்படுத்துவதற்கு உலகளாவிய தலைவராக யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு முன்னரை விடவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் காலப்பகுதியில் நாம் உள்ளோம்.

கலாசாரத்திற்கென முன்னர் இல்லாத மகத்தான வரவேற்பைப் பெறுதல், உலக அமைதி, அபிவிருத்திக்கான அறிவுத்திறன் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்தல், AI தொழில்நுட்பத்தை உயர் நெறிமுறைகளுடன் கையாளுதல், நிலைபேறான கல்வி, சமுத்திர உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் திறனை மேம்படுவதற்காக யுனெஸ்கோ எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் காலத்திற்கு ஏற்றவை.

கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களில் காணப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான நாகரிகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கு 1980களிலிருந்து யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எமது அரசு இனவாதத்தை புறக்கணிக்கிறது. அனைவருக்கும் சமமான உரிமைகளுடன் அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. குரோத அரசியல் இலாபங்களுக்கு எதிராகவும், மக்கள் பிளவுபடுவதை விரும்பாதவர்களுமே இந்த தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தினால் உருவாகியுள்ள பேரழிவுகள் தொடர்பில் அந்த நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களுக்கு இலங்கை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments