இயக்குனர் வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு திரைப்படமாகவே இருக்கும். அத்துடன் வெற்றித்திரைப்படமாகவும் அமையும்.
அந்த வகையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு, GOAT படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூலில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பார்ட்டி பட தாமதத்திற்கான காரணம்
2018 – ம் ஆண்டு டி.சிவா தயாரிப்பில் பார்ட்டி என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படத்தில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
ஆனால், சில காரணங்களால் இந்த படம் வெளியிடாமல் இருந்தது. தற்போது, இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், ஃபிஜி-யில் இருந்து வரவேண்டிய சான்றிதழ் தாமதத்தினால் இந்தப் படம் வெளியீடு தடைப்பட்டது. அங்கு தற்போது வேறொரு அரசாங்கம் பதவியேற்றதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகையை விரைவில் திருப்பித் தருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சான்றிதழைப் பெற்று படத்தை டிசம்பரில் வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் டி.சிவா தெரிவித்துள்ளார்.
பார்ட்டி படத்துக்காக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அவர்கள் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.