Friday, April 18, 2025
Homeஇலங்கைஉள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இரத்துச் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  நேற்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

”உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளோம். தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களில் 263 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பிறப்புச்சான்றிதழின் செல்லுபடி காலம் காரணமாக ஒருசில வேட்புமனுக்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவோம்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெருமளவிலாள உள்ளுராட்சி அதிகாரசபைகளை கைப்பற்றினோம். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப்பெற்றோம். இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மீண்டும் கிராமத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவோம்.

தேசிய மக்கள் சக்தி போலியான வாக்குறுதிகள் மற்றும் 75 ஆண்டுகால அரசாங்கங்கள் மீதான வெறுப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதி பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் பொய்யை மக்கள் தற்போது நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள்.ஆகவே நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்ல விவகாரத்தை அரசாங்கம் தற்போது மறந்து விட்டது. வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்தால் அவர் நிச்சயம் வீட்டை விட்டு வெளியேறுவார்.” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments