ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.
இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் கடின உழைப்பால் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.
இன்று இவருடன் நடிக்க வேண்டும் என்று பல நடிகைகள் காத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதற்கு முன்பு இவருடன் இணைந்து 18 படங்களில் ஜோடியாக நடித்த பெருமை ஸ்ரீதேவியை சேரும்.
இவர்கள் ஜோடியாக நடித்த படங்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ப்ரியா, தர்மயுத்தம், ஜானி, போக்கிரி ராஜா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதிக சம்பளம் வாங்கிய நடிகை
தற்போது இருக்கும் சினிமாவில் நடிகைகளை விட நடிகர்களுக்கு தான் அதிக சம்பளம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அந்த காலகட்டத்தில் நடிகர் ரஜினியை விட ஸ்ரீதேவி அதிக சம்பளம் வாங்கினாராம்.
ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்த மூன்று முடிச்சு படத்திற்கு ஸ்ரீதேவி சம்பளமாக ரூ. 5 ஆயிரம், ரஜினிகாந்த் ரூ. 2 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.