பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கிவிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (07) நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டு குழு விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பெரராரி ரக வாகனத்தை ஓட்டுபவருக்கு போலியான அனுமதிப்பத்திரம் ஒன்றே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க,
“ உண்மையிலேயே, சபாநாயகர் அவர்களே, இன்றைய விவாதத்தை நாம் ஒரு சோகமான செய்தியுடன் ஆரம்பிக்க வேண்டும்.
அண்மையில் இடம்பெற்ற ஒரு பயங்கரமான வாகன விபத்து தொடர்பிலான அறிவித்தல் தான் அது.
பெரராரி ரக வாகன அனுமதிப்பத்திரம் இருப்பதாக கூறியவர் அல்ஜசீராவில் மோதி நசுங்கி விட்டார்.
அவருடைய மூளைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்காரணமாக, இப்போதெல்லாம் அவர் கண்டவற்றை உலறி வருகிறார்.” எனத் தெரிவித்தார்.
அண்மையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது மீண்டும் நாடாளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்க வாய்ப்புகள் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பெராரி ரக வாகனத்தின் அனுமதிப் பத்திரம் உடையவர், எல்போர்ட் உள்ளவர்களுடன் பயணிக்க விரும்புவதில்லை” என அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் (06) அவர் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.