Friday, April 18, 2025
Homeஇலங்கைநாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டி – கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டி – கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கிவைப்பு


நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டிக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது

ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் நாடாளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது.

விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் தலைமையின் கீழ் பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டிங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஏழு உள்ளக விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்நூகர் இறுதிப் போட்டி பிரதமர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி.சானக்க மற்றும் ரோஹன பண்டார பங்குபற்றிய இப்போட்டியில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க வெற்றிபெற்றார்.

இங்கு நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்துப் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் எதிர்த்திசையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வருண லியனகே மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் போட்டியிட்டனர்.

தாம் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவன்ச பெற்றுக்கொண்டார்.

மேசைப்பந்து (ஆண்கள்) போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி பெற்றுக்கொண்டார்.

உள்ளக விளையாட்டுப் போட்டியின் தனிநபர்களுக்கான மேசைப்பந்து (பெண்கள்) போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே பெற்றுக்கொண்டார்.

சதுரங்கப் போட்டியில் (செஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) அர்ச்சுனா இராமநாதன் பெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டார்.

அத்துடன், கரம் விளையாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க வெற்றிபெற்றதுடன், இப்போட்டியில் இரண்டாவது இடத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பெற்றுக்கொண்டார்.

பூல் (pool) விளையாட்டில் நாடாளுமன்ற ரோஹன பண்டார வெற்றிகொண்டதுடன், இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க பெற்றுக்கொண்டார்.

இதில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி உரைநிகழ்த்திய பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, மிகவும் வேலைப்பழு மிக்க காலத்தில் மனதை இலகுவாக வைத்திருக்கவும், உறுப்பினர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தமைக்காக கௌரவ விளையாட்டுப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் நாடாளுமன்ற நளின் பண்டார ஆகியோருக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் நடுவர்களாகப் நாடாளுமன்ற பணியாளர்களான தரங்க அபேசிங்கே மற்றும் சமீர சஞ்சீவ ஆகியோர் பங்களித்தனர்.

கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, நாடாளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments