பட்டலந்தை வதை முகாம் தொடர்பில் நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டுமென, முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலையடுத்து பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது . இந்நிலையில் குமார் குணரட்னம் நேற்று கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பட்டலந்த வதை முகாம் குறித்த விசாரணைகளுக்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.இதில்,அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார்.
இதுகுறித்து அண்மையில் அல்ஜசீராவுக்கு விசேட பேட்டியும் வழங்கினார்.31 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பான பல விடயங்களை அவர் வெளிப்படுத்தினார்.
நாட்டில்,1988-1989 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்களை அடக்கும் பொருட்டே பட்டலந்த வதை முகாம் பயன்படுத்தப்பட்டது. அந்தக்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க சக்திமிக் அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.எனவே, ரணில் உட்பட இதனுடன் தொடர்புடைய சகலரும் விசாரிக்கப்பட்டு வௌிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என,குமார் குணரட்னம் தெரிவித்தார்.