Thursday, April 24, 2025
Homeஇலங்கைவடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளன

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளன


சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள நிலைமை ஆய்வு தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப் அமைப்பு பல்வேறு வகையான உதவிகளை எமது மக்களுக்குச் செய்து வருகின்றது. அதற்கான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன.

மேலும், வடக்கு மாகாணம் தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை சேர்க்கும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதாரப் பாதிப்பால் ஏற்பட்ட வறுமை நிலைமை ஒரு காரணமாக உள்ளபோதும், பெற்றோர் மறுமணம் செய்வதால்தான் பெரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. சிறுவர் இல்லங்களில் சிறுவர்களை இணைப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் சிறுவர் இல்லங்களை நோக்கி வருபவர்களை இணைக்காமல்விட்டாலும், பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.

எனவே இது எமக்கு சிக்கலான நிலைமையாக உள்ளது என ஆளுநர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியோனா அஸ்லான்சிவிலுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments