அல்லு அர்ஜுன்
புஷ்பா 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க அப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார். போலீஸ் அனுமதியை மறுத்த பிறகும் அல்லு அர்ஜுன் அங்கு வந்ததனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். மேலும் ஒரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இதுகுறித்து பேசியுள்ளார்.
முதலமைச்சர் எழுப்பிய கேள்வி
இதில் “போலீசார் அனுமதி மறுத்த பிறகும் ‘புஷ்பா 2’ பட சிறப்பு காட்சியில் நடிகர் அல்லு அர்ஜுன் பங்கேற்றார். இதனால் தியேட்டருக்கு வெளியே ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
கூட்ட நெரிசல் அதிகமாகிக்கொண்டே வருகிறது, நீங்கள் இங்கே இருக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியும் படம் முடிந்த பிறகுதான் புறப்படுவேன் என அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.
காவல் துணை ஆணையர் அவரை வலுக்கட்டாயமாக அழைத்தபோதே அவர் புறப்பட்டார்.
அப்போதும் வெளியே சென்று காரின் மேற்கூரையை திறந்து ரோடு ஷோ நடத்துகிறார்.
என்ன மாதிரியான மனிதர் அவர்? அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா? கண் அல்லது கிட்னியைத்தான் இழந்தாரா? அவரது வீட்டிற்கு சென்று அவரை சினிமா பிரபலங்கள் பார்க்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் யாராவது கவலைப்பட்டீர்களா? தெலங்கானா சட்டமன்றத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இவ்வாறு பேசியுள்ளார்.