2055 ஆம் ஆண்டுக்குள் இலங்கை ஒரு டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை இலக்காகக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலொன்றில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க,
”அடுத்த 30 ஆண்டுகளில் பொருளாதாரம் பத்து மடங்கு வளர வேண்டும். ஆசியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய செல்வாக்குடன், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா ஒப்பிடக்கூடிய இலக்கை நிர்ணயித்துள்ளது. அவ்வாறான இலக்கை இலங்கையும் நிர்ணயிக்க வேண்டும்.
இலங்கையை அதன் தற்போதைய பலவீனமான நிலையிலிருந்து மீட்டெடுக்க இந்தியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
2022 முதல் 2024 வரை எனது பதவிக் காலத்தில், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை ஆராய்ந்தோம். நீண்டகால வளர்ச்சிக்கு இத்தகைய கூட்டாண்மைகள் மிக முக்கியமானவை.
மன்னாரில் அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் நிறுத்தியமை நாட்டுக்கு பாதகமாகும். எனது பதவிக் காலத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த திட்டத்தில் இலங்கை பங்குதாரர்கள் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் ஈடுபட்டனர். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பது எதிர்காலத்தில் பெரிய அளவிலான முதலீடுகளை ஊக்கப்படுத்தக்கூடும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.