ஹோமாகம பிரதேச சபைக்குச் சொந்தமான மீகொட-முத்துஹேனவத்தை மயானபூமி முறையான பராமரிப்பு இல்லாததால், இறுதிக் கிரியைகளின் போது சடலங்கள் முறையாக எரிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
இவ்வாறு கடந்த 18ஆம் திகதி தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட உடல் முறையாக எரிக்கப்படாமையால், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும் தகனக்கூட ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், சடலத்தை கொண்டு வந்தவர்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி எண் மூலம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர், மேலும் ஹோமாகம பிரதேச சபைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு அங்கு வந்து இந்த விஷயத்தை விசாரித்த போது, தகனக் கூடத்தில் இருந்த எரிவாயு தீர்ந்து போனதால் உடல் முறையாக தகனம் செய்யப்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீகொட பொலிஸார், பிரதேச சபை அதிகாரிகளுடன் சேர்ந்து, எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து உடலை மீண்டும் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மீகொடை தஹம் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு குழுவினர், குறித்த மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட மற்றொரு உடலையும் இதேபோன்று முறையாக எரிக்காத சம்பவத்தையும் எதிர்கொண்டிருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.