ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பெற்று வந்த ஓய்வூதியத் தொகை எதிர்வரும் மாதத்தில் இருந்து நிறுத்தப்படும் என நாடாளுமன்ற தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற நிதி இயக்குநருக்கு அறியப்படுத்தியுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து வருடங்களை நிறைவு செய்திருந்தால் அவர் நாடாளுமன்ற ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவர் என்பதுடன் அவர் ஓய்வு பெற்றவுடன் ஜனாதிபதி ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவராவார்.
இந்நிலையில், தனக்கு இரண்டு ஓய்வூதியங்கள் அவசியமில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை நீக்குமாறு ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கும் முன்னர் நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதமொன்றின் மூலம் அறியப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் அந்தக் கடிதத்தை அதன் நிதி இயக்குநருக்கு அனுப்பியுள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.