பாலகிருஷ்ணா, பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்கு மஹாராஜ் தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
ஸ்கூல் பிரின்சிபால் கிருஷ்ணமூர்த்தி (சச்சின் கெடேகர்) தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
எம்.எல்.ஏவின் தம்பி யானை தந்தம் கடத்துவதாக கிருஷ்ணமூர்த்தி போலீசில் புகார் அளிக்க, அவருக்கும் எம்.எல்.ஏவுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
உடனே கிருஷ்ணமூர்த்தி வீட்டில் வேலை பார்க்கும் கோவிந்த், சிறைக்கைதியாக இருக்கும் நானாஜியை (பாலகிருஷ்ணா) வரவழைக்கிறார்.
கிருஷ்ணமூர்த்தியின் பேத்தி மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்க வரும் நானாஜி, ஒரு கட்டத்தில் தனது பழைய எதிரி பப்லு சிங் தாக்கூரை (ரிஷி) சந்திக்கிறார்.
அவரோ நானாஜியை “டாக்கு மஹாராஜ்” எனக்கூறி வியந்து பார்க்கிறார்.
உண்மையில் நானாஜி யார்? கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தை அவர் ஏன் காப்பாற்ற வேண்டும்? கேங்ஸ்டர் கும்பலுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விகளுக்கு விடையே இப்படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
பாபி கொல்லி இயக்கியுள்ள இப்படம் பாலகிருஷ்ணாவுக்காகவே செதுக்கியது போல் உள்ளது.
ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகும் பாலைய்யா, குழந்தையுடன் கொஞ்சி பாசமழையை பொழிகிறார்.
அதே சமயம் பஞ்ச் டயலாக் பேசி சண்டைக்காட்சிகளிலும் மிரட்டுகிறார்.
வில்லன் பாபி தியோல்தான் என்றாலும், கன்னட ஹீரோ ரிஷி சைக்கோத்தனமான வில்லத்தனத்தில் அவரையே மிஞ்சிவிடுகிறார்.
முதல் பாதி ஒரு கதையை சொல்லி இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் ஆரம்பிக்கும்போது வேறொரு கதைக்கு மாறுவது போல் தோன்றுகிறது.
அந்த அளவுக்கு நீள்கிறது பிளாஷ்பேக். ஆனாலும் எங்கேயும் தொய்வில்லாமல் நகர்கிறது திரைக்கதை.
இப்படத்தின் மொத்த கதையைப் பார்க்கும்போது Mr. மெட்ராஸ், கிரி, பேட்ட போன்ற படங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
அதேபோல் தெலுங்கு மசாலா படங்களுக்கே உரித்தான பல காட்சிகள் உள்ளன.
குறிப்பாக SI ஆக வரும் ஊர்வசி ரவுட்டலா. அவரது அறிமுக காட்சியில் அவர் போலீஸ் என்று கூறினாலும் நம்ப முடியவில்லை. அந்தளவுக்கு கவர்ச்சியாக தெரிகிறார்.
VTV கணேஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட சில தமிழ் கதாபத்திரங்கள் இருப்பதும், “திருப்பாச்சி அருவாள நாங்க கொடுத்தோம்ன்னு சொல்லுங்க” என்று வசனம் இருப்பதும் தமிழ் பார்வையாளர்களுக்கு கனெக்ட் ஆகும் விஷயங்கள்.
முந்தைய பாலைய்யா படங்களை ஒப்பிடுகையில் இந்த படத்தில் லாஜிக் மீறல்கள் குறைவுதான் என்றாலும், அதீத வன்முறை காட்சிகள் நெருடலாக உள்ளன.
தமனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய தூணாக உள்ளது. எடிட்டிங் சிறப்புதான் என்றாலும் பிளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
மலையாளத்தில் இருந்து ஷைன் டாம் சாக்கோ, கன்னடத்தில் இருந்து ரிஷி, இந்தியில் இருந்து பாபி தியோல் என நடிகர்களை கொண்டுவந்து Pan இந்தியா படமாக காட்டிட முயற்சித்திருக்கிறார்கள்.
க்ளாப்ஸ்
பாலகிருஷ்ணாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ்
சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள்
லாஜிக் மீறல்கள் தெரியாதப்படியான திரைக்கதை
அழுத்தமான பிளாஷ்பேக்
மைனஸ்
அதீத வன்முறைக் காட்சிகள்