Wednesday, April 9, 2025
Homeஇலங்கைதட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம்

தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம்


நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது.

அறுவடை இடம்பெற்று வருகின்ற போதிலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருப்பதோடு, சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி போதியளவு அரிசியை கையிருப்பில் வைத்திருக்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் 5 ஆவது தடவையாக கூடியது.

மேலும், இந்த ஆண்டில் அதிக மழை பெய்தமையால், இரண்டு முறை விளைச்சல்களுக்கு சேதம் ஏற்பட்டு, எதிர்பார்த்த அறுவடையில் கணிசமான அளவு குறைந்துள்ளதும் இங்கு குறிப்பிடப்பட்டது.

கால்நடை உணவிற்கு முறையற்ற விதத்தில் அரிசியைப் பயன்படுத்துவதே அரிசி தட்டுப்பாட்டுக்கு மற்றொரு முக்கிய காரணம் எனவும், கால்நடை உற்பத்தித் தொழிலில் கால்நடை உணவுத் தேவைக்காக உடைத்த அரிசியை இறக்குமதி செய்வது மற்றும் மாற்று உணவுகளை பயன்படுத்துவது குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

அதன்படி, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அளவு உடைந்த அரிசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சின் பணிப்பாளர் தலைமையிலான குழுவை அமைப்பதற்கும் உணவுப் பாதுகாப்புக் குழு அனுமதி வழங்கியது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments