நாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸ் திணைக்களம் தற்போது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்திருந்த ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களின் பின்னர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.
தற்போது கண்டி மாவட்டம் பல்லேகெல, தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கம் குறித்து பல விடயங்கள் வெளியாகி வருகின்றன.
ரணில் அரசாங்கத்தின் போது அரசியலமைப்பு பேரவையை மீறி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் மீது அன்று பலரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் வெளிப்படாகவே தென்னகோனை பதவி நீக்கம் செய்ய கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணையை முழுமையாக ஆதரிப்பதாக பிரதான எதிர்க்கட்சியும் களமிறங்கியுள்ளது.
எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, அறுதிப் பெரும்பான்மையுடைய அரசாங்கம் உடனடியாக தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்ய முடியாதா என்றொரு கேள்வி எழுந்துள்ளது.
அதிகாரத் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல முக்கிய குற்றச்சாட்டுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் அவரை ஏன் உடனடியாக பதவி நீக்கம் செய்ய முடியவில்லை?
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தேசபந்து தென்னகோனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மனநோயால் பாதிக்கப்பட்டவர் என வைத்தியர்களால் உறுதிப்படுத்தபட்டால், உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு அல்லது நீதிமன்றம் மூலம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஜனாதிபதியால் நேரடியாக பதவி நீக்கம் செய்ய முடியும்.
எனினும், இந்த சந்தரப்பத்தில் நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றை சமர்பித்து, சபாநாயகர் மூலம் மூவர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்படும்.
இந்தக் குழு மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இது தொடர்பில் காரணிகள் ஆராயப்பட்டதன் பின்னர் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படும். இறுதியில், பதவி நீக்கம் செய்வதற்கான போதிய காரணங்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிவித்த பின்னர், அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவித்த பின்னர், ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்” என தெரிவித்தார்.