Monday, April 21, 2025
Homeஇலங்கைதேர்தல் விதிமுறை மீறல்கள் – வவுனியாவில் இதுவரை 4 முறைப்பாடுகள்

தேர்தல் விதிமுறை மீறல்கள் – வவுனியாவில் இதுவரை 4 முறைப்பாடுகள்


தேர்தல் செலவுகளை வெளிப்படுத்தும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற – உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான – கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேர்தல் பிரசார அலுவலகங்கள் அமைத்தல் மற்றும் சட்டதிட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

விசேடமாக, 154 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடைபெறுகின்ற போதும், இம்முறை உள்ளூராட்சி தேர்தல் சட்டத்திற்கு அமைய வட்டாரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றது. அதற்கு அமைவாக 5 உள்ளூராட்சி சபைகளிலும் உள்ள 56 வட்டாரங்களிலும் வாக்குகள் எண்ணப்படும். ஒரு வட்டாரத்தில் பல வாக்களிப்பு நிலையங்கள் இருந்தாலும் ஒரு நிலையத்திற்கு பெட்டிகள் கொண்டு வரப்பட்டு தனித்தனியாக எண்ணப்பட்டு பெறுபேறுகள் வெளியாகும்.

தேர்தல் செலவுகளை வெளிப்படுத்தும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து வேட்பாளர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின் தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும். அவவாறு சமர்பிக்காவிடின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். அது பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக தேர்தல் செலவினங்கள் மற்றும் அதனை எவ்வாறு சமர்ப்பிப்பது தொடர்பில் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நீதியானதும், நியாயமானதுமான ஒரு தேர்தலை எதிர்பார்க்கின்றோம். ஒரு வாக்காளர் யாருக்கு வாக்களிக்கின்றார் என்பதை தவிர, அனைத்து விடயங்களும் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படுகின்றது. முறைப்பாட்டு பிரிவு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரைக்கும் 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. நான்கும் சிறிய முறைப்பாடுகள். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பானவை. தேர்தல் வன்முறை தொடர்பில் எவையும் பதிவாகவில்லை. அதில் 3 முறைப்பாடுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுறுத்தப்பட்டுளளன. ஒரு முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தபால் மூல வாக்கெடுப்பு காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு கட்சிகள் மற்றும் சுயேடச்சைக் குழுக்களிடம் கோரியுள்ளோம். தபால் மூல வாக்களிப்புக்கான ஏற்பாடுகளில் அதனை பொதி செய்து அனைத்து நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறும். 22 ஆம் திகதி தேர்தல்கள் அலுவலகம், மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும். ஏனைய அரச திணைக்களங்கள் மற்றும் முப்படையினரின் தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறும். அதில் தவறுபவர்கள் இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகத்தில் வாக்கினைச் செலுத்த முடியும். இந்த காலப்பகுதியில் வாக்களிப்பு இடம்பெறும் திணைக்களங்களுக்கு அண்மித்த பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். – எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments