Wednesday, March 26, 2025
Homeஇலங்கைதையிட்டியில் புதிதாக முளைத்துள்ள கட்டடத்துக்கு எதிராக போராட்டம்

தையிட்டியில் புதிதாக முளைத்துள்ள கட்டடத்துக்கு எதிராக போராட்டம்


பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த, தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் இராணுவத்தின் முழு முயற்சியுடன் மற்றொரு சட்டவிரோதக் கட்டடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள மற்றைய சட்டவிரோதக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு மேலதிகமாக, அந்தப் பகுதியில் மிக இரகசியமான வகையில் வேறுசில சட்டவிரோதக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இராணுவத்தினர் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதற்கு பதில் மாவட்டச் செயாளர் மருதலிங்கம் பிரதீபன் மறுப்புத் தெரிவித்திருந்தார். தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாகவும், அவ்வாறான சட்டவிரோதக் கட்டடங்கள் எவையும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இராணுவத்தால் அமைக்கப்பட்டுவந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டங்களே இன்று மத வழிபாடுகளுக்குப் பின்னர் கையளிக்கப்பட்டன.அந்தக் கட்டடங்கள் பிக்குகள் தங்குவதற்கான மடாலயமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையில் தொடர்ச்சியாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை மக்களுக்கு உரியதாக்கும் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments