அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் சிறப்புப் பேராசிரியரான கணநாத் ஒபேசேகர தனது 95 ஆவது வயதில் காலமானார்.
அவர் 1955 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் 1958 இல் வோஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் 1964 இல் மானுடவியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
1968 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்த அவர் 1972 முதல் 1980 ஆம் ஆண்டு வரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக இருந்தார்.
1983 ஆம் ஆண்டு முதல் 1988 வரை, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய கணநாத் ஒபேசேகர, 1988 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தனது அறிவைப் புகட்டினார்.
இலங்கையிலும் இந்தியாவிலும் களப்பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் மனோ பகுப்பாய்வு, மானுடவியல் மற்றும் தனிப்பட்ட அடையாளங்கள் சமய அனுபவத்துடன் தொடர்புடைய வழிகளில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.
இலங்கையில் பௌத்தம் மற்றும் இன நெருக்கடி போன்றவற்றில் செல்வாக்குமிக்க ஆய்வுகளை மேற்கொண்ட மானுடவியலாளர் என்றும் அவர் அறியப்படுகிறார்.
தனது வாழ்நாளில் பல நூல்களை எழுதியுள்ள பேராசிரியரான அவர், தான் ஆலோசித்த பல நூல்கள் அடங்கிய தனது நூலகத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தார்.
அவர் எழுதிய படைப்புகளில் கிராமிய சிலோனில் நில உரிமையும் உள்ளது, இது ஒரு சமூகவியல் மற்றும் வரலாற்று ஆய்வாகவும் இருந்தது.