Wednesday, April 16, 2025
Homeஇலங்கைபோக்குவரத்து பிரச்சினைகளை ஆராய மூன்று உப குழுக்கள்

போக்குவரத்து பிரச்சினைகளை ஆராய மூன்று உப குழுக்கள்


பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் 2025 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் மூன்று உப குழுக்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுத்தார்.

முறைசாரா போக்குவரத்துத் துறை சார்ந்த பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முதலாவது குழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இது, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்படாத ஊழியர்களை தொழில்சார் அடிப்படையில் ஏற்று அங்கீகரிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது.

தனியார் பேருந்துச் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மின்னணு செயலிப் பயன்பாட்டின் வாயிலாக போக்குவரத்துத் துறையில் ஈடுபடுபவர்கள் (App Base Workers), இவர்களுக்காக ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்தல் போன்ற விடயங்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும்.

இந்த உபகுழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சந்தன சூரியஆரச்சி (தவிசாளர்), ஜகத் விதான, தினிந்து சமன், தேவானந்த சுரவீர ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இரண்டாவது உப குழு, போக்குவரத்துத் துறை தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறை சரியான தடத்தில் பயணிக்க வழிநடாத்துவதற்கான குழுவாக அமைந்துள்ளது.

போக்குவரத்துத் துறை தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் போக்குவரத்துத் துறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல், போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தும் போது பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான சட்ட மற்றும் நிருவாக முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் என்பன இந்தக் குழுவின் நோக்கங்களாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர அவர்களைத் தவிசாளராகக் கொண்ட இந்த உபகுழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த த சில்வா, தனுர திசாநாயக, சுஜீவ திசாநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய இதர சேவைகளை உருவாக்குவதற்கான வணிக மாதிரிகளை (Business Models ) உருவாக்குவதை நோக்காகக் கொண்டு மூன்றாவது உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி, போக்குவரத்துத் துறையின் அடிப்படை நோக்கங்களுடன் தொடர்புடைய துறைகளை மேம்படுத்தல் மற்றும் இதர சேவைகளை உருவாக்குவதன் மூலம் கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கான வணிக மாதிரிகளை உருவாக்குவது பற்றி இந்தக் குழு ஆராயும்.

இந்த உபகுழுவின் உறுப்பினர்களாகக் நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்ஹ (தவிசாளர்), ரவீந்திர பண்டார மற்றும் தனுஷ்க ரங்கனாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments