தமிழ் இனவாத வன்முறை கும்பலின் போராட்டத்தையடுத்து திஸ்ஸ விகாரையிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு உத்தரவிட்டது யார்? வடக்கு பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா?
– இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” காங்கேசன்துறையில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புண்ணிய நிகழ்வொன்று நடைபெற்றது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரை திறக்கும் நிகழ்வே அதுவாகும். 29 தேரர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இராணுவத்தினர் கடந்த 22ஆம் திகதி முதலே இந்த புண்ணிய காரியத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய நாட்டியக் கலைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
இப்படி ஏற்பாடுகள் எல்லாம் இடம்பெற்றிருக்கையில் , நிகழ்வை நிறுத்துமாறு வலியுறுத்தி காலை 7 மணியளவில் தமிழ் இனவாத வன்முறை கும்பலொன்று போராட்டத்தில் ஈடுபட்டது.
இதனையடுத்து இராணுவத்தினரை விகாரையில் இருந்து செல்லுமாறு மேல் மட்டத்திலிருந்து பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இராணுவத்தினர் வெளியேறினர். பெரஹெர மாத்திரமே இடம்பெற்றது. தேரர்களுக்கு பகுலுணவும் வழங்கமுடியாமல்போனது.
இந்த உத்தரவை வழங்கியது யார்? ஜனாதிபதியா, பிரதி பாதுகாப்பு அமைச்சரா, பாதுகாப்பு செயலாளரா, இராணுவத் தளபதியா? அல்லது பிரபாகரனின் அவதாரமா என கேட்கின்றோம்.
பௌத்த நாட்டில் வடக்கில் விகாரையொன்றில் புண்ணிய நிகழ்வொன்றை நடத்துவதற்கு வன்முறை கும்பல் இடமளிக்க மறுக்கின்றதெனில் நாட்டில் தேசிய பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது? இந்த குழுவுக்கு பயந்து நிகழ்வை நிறுத்தியது கோழைத்தனமாகும்.” – என்றார்.