Monday, March 24, 2025
Homeஇலங்கைவிகாரைக்காக காணி கொள்ளையடிக்கப்பட்டதை கொழும்பில் தமிழர்கள் ‘சிங்களத்திலேயே விளக்கினர்’  

விகாரைக்காக காணி கொள்ளையடிக்கப்பட்டதை கொழும்பில் தமிழர்கள் ‘சிங்களத்திலேயே விளக்கினர்’  


யுத்தத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணியில் இராணுவத்தின் ஆதரவுடன் வடக்கில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளமைக்கான நம்பகமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

காணி அபகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்த ஆதாரங்களுடன், சிங்கள பௌத்த கருத்தை மாத்திரம் தொடர்ந்தும் வெளியிடும் ஊடகவியலாளர்களை சந்திக்கும் வகையில் தலைநகருக்கு வந்திருந்தனர்.

காங்கேசன்துறை தையிட்டி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்காக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணியை விடுவிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழர்கள், கொழும்பில் நேற்று முன்தினம் (மார்ச் 20) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, தமது காணி மீதான உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும், காணி கொள்ளைக்கான நம்பகமான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.

1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக அப்புத்துரை சுரேஷ்குமார் சிங்கள மொழியில் இதன்போது தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கு வடக்கே வலிகாமம் பகுதியில் இராணுவத்தினரின் ஆதரவுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸ்ஸ ஆலயத்திற்காக தனது காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அது பத்திரப்பதிவு காணி என்பதை வெளிப்படுத்தினார்.

“திஸ்ஸ விகாரைக்குள் எனது காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான பத்திரங்கள் என்னிடம் உள்ளன. இந்த உறுதிப் பத்திரம் 10/08/1989 இல் எழுதப்பட்டது. அங்கிருந்த அனைத்து தனியார் காணிகளும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.”

தனது காணியை மீட்டுத்தருமாறு கோரும் அவர், தனது காணிக்கு முன்னால் உள்ள இந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையும் தடைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

“எனது காணிக்கு எதிரில் தமிழ்க் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு செல்லும் பாதை தடைப்பட்டுள்ளது. எனவே, இந்த வீதியையும் விடுவிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.”

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழில் உரையாற்றிய பாதிக்கப்பட்டவர்கள் பலர், விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணி தமக்குரியது என்பதை உறுதிப்படுத்த பத்திரங்கள் இருப்பதாக வலியுறுத்தினர்.

திஸ்ஸ விகாரைக்காக இராணுவம் பலவந்தமாக காணிகளை கையகப்படுத்தியதன் பின்னணியை கொழும்பில் சிங்கள மொழியில் விளக்கிய பத்மநாதன் சாருஜன், யுத்தம் காரணமாக தையிட்டி பிரதேசத்தை விட்டு கிராம மக்கள் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்றதாக கூறுகிறார்.

காணி விடுவிக்கப்பட்டதன் பின்னர் காணிக்கு திரும்பிய போது சுமார் 150 பரப்பு காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், 2018 ஆம் ஆண்டு நாகதீப விகாரையின் விகாராதிபதி முன்னர் விகாரை இருந்த இடம் 20க்கும் மேற்பட்ட பரப்பு காணி எனக் குறிப்பிட்டு, காணி உறுதியை தயாரித்துள்ளதாகவும்  வலியுறுத்தியுள்ளார்.

நாகதீப விகாரையின் காணியில் விகாரையை அமைப்பதற்கு அப்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் குரே அடிக்கல் நாட்டினார் என்பதை நினைவுகூர்ந்த பத்மநாதன் சாருஜன், 2021 ஆம் ஆண்டு கொவிட் காலத்தில் அப்பகுதியைச் சுற்றியுள்ள தமிழர்களின் தனியார் காணிகளை சுவீகரித்து விகாரை கட்டப்பட்டதாக வலியுறுத்தினார்.

கொழும்பு ஊடகவியலாளர்களிடம் அவர் காட்டிய வரைபடத்தில் தமிழ் மக்களின் தனியார் காணியில் எவ்வாறு விகாரை கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகக் காட்டப்படுகின்றது.

“அவர்களுடைய காணியே இங்கு இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டு இப்போது இங்கு விகாரை கட்டப்பட்டுள்ளது. அது முற்றிலும் சுற்றி வளைக்கப்பட்டு சுமார் 150 பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.”

குறித்த காணியில் அனுமதியின்றி விகாரை நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்து பொறுப்பான அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என பத்மநாதன் சாருஜன் தலைநகர் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது.” என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. “கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது” என இராணுவம் கூறுகிறது.

தமது காணிகளை விடுவிக்கக் கோரி 2023ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கோவிலுக்கு அருகில் போராட்டம் நடத்தும் தமிழர்கள், 14 தமிழ் குடும்பங்களின் 100 பரப்பு (6.2 ஏக்கர்) காணிகளை இராணுவம் பலவந்தமாக கையகப்படுத்தி திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் கோவில் கட்டுவதற்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படவில்லை எனவும் காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments