வாரியபொல பகுதியில் அண்மையில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 ஜெட் விமானத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் விபத்து தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வாரியபொல, மினுவங்கேட் – வெலகெதர பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இலங்கை விமானப்படையின் விமானி பயிற்சி விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தின் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல், பாதெனியவில் உள்ள மினுவங்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர்.
இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும், பயிற்சி விமானி அதிகாரியும் இருந்துள்ளனர். குறித்த இருவரும் குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து காலை 07.27 மணியளவில் விமானம் புறப்பட்டு, காலை 07.55 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து குறித்து விசாாரணை செய்ய ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.