Wednesday, April 2, 2025
Homeஇலங்கைவேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிப்பு

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிப்பு


உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவை உயர்நீதிமன்றில் வழக்கல் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக பல சபைகளுக்கு அரசியல் கட்சிகளாலும் , சுயேட்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை இவ்வார இறுதிக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கும் சாத்தியம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பபட்ட உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய எழுந்துள்ள சில சட்ட சிக்கல்கள் தொடர்பிலேயே பல கட்சிகளினாலும், சுயேட்சை குழுக்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் இம்முறை நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் கட்சியின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மனுதாரராகவும் அவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் அடிப்படையில் அக்கட்சிகள் சேர்ந்து போட்டியிடவுள்ள சில சபைகளுக்கான நிராகரிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களைப் பொறுத்தவரை பிரஸ்தாப கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லாஹ் மனுதாரராகவும் இருக்கின்ற நிலையில், அவற்றுக்காகவும் வாதாடவுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் வழக்கு தாக்கல் செய்வதற்கான தயார்ப்படுத்தல்களை தமது தரப்பினர் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் குறித்த விடயம் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments