2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அதிகளவான சபைகளை எம்மால் கைப்பற்ற முடியும். 2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் வென்றதுபோல இம்முறையும் சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்.” எனவும் நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். எமது ஆட்சியில் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனவே, கிராமிய மக்கள் கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் எமக்கு வழங்குவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த அரசாங்கம் ஆறுமாத கால பதவியை நிறைவு செய்துள்ளது. எனினும், எவ்விதமான புதிய திட்டங்களும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.