தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
கொழும்பு அமெரிக்க தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மனோ கணேசன் எம்பியுடன் த.மு.கூயின் அரசியல் குழு உறுப்பினர், ஜ.ம.மு.வின் சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் அமெரிக்க தரப்பில் அரசியல் அதிகாரி செச் லோன்ஸ், அரசியல் நிபுணர் குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த வாரம் அமெரிக்க பயணமாக உள்ளதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என அமெரிக்க தூதுவர் மனோ கணேசனிடம் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் தெரியவருவதாவது,
அமெரிக்காவுக்கு இலங்கை 16 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 23 விகிதம் என்பதுடன், இலங்கை பொருட்களை அதிகமாக வாங்கும் நாடாக அமெரிக்காவே இருக்கிறது.
இந்நிலையில், இலங்கை அமெரிக்காவில் இருந்து 370 மில்லியன் டொலர் பெருமதியான பொருட்களையே இறக்குமதி செய்திகறது. இலங்கைக்கு சார்பாக இருக்கும் இந்த வர்த்தகம் தொடர்பில், அமெரிக்காவில் இருந்து அதிகமான பொருட்களை இலங்கை வாங்க வேண்டும் என அமெரிக்காவின் புதிய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கலாம் என அமெரிக்க தூதுவர் மனோகணேசனிடம் தெரிவித்தார்.
குறிப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஆடை ஏற்றுமதி பொருட்களுக்கான பருத்தி ஆடை மூல பொருளை இலங்கை, அமெரிக்காவில் இருந்து அதிகமாக வாங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மலையக மக்கள் தொடர்பில் காணி உரிமை, வீட்டு உரிமை ஆகிய விவாகாரங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கள் தெளிவான பார்வையை கொண்டிருக்கவில்லை. எனினும் இது தொடர்பில் அவசியமான நெருக்குதல்களை தந்து காணி, வீடு உரிமை பயணத்தை தொடர அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளோம் என மகோகணேசன் அமெரிக்க தூதுவரிடம் கூறியுள்ளார். நாம் கட்சியாக 2015ம் வருடம் முதல் இந்தப் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, இராணுவம் மீள்-அழைப்பு, காணாமல் போனோர் அலுவலகம், உண்மை ஆணைக்குழு ஆகிய விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னுரிமை வழங்காமல், முதலில் பொருளாதார சீரமைப்பு என்ற விவகாரத்துக்கே முன்னுரிமை வழங்குகிறது. ஆனால், நாம் பொருளாதார சீரமைப்பு, தேசிய விவாகரம் ஆகிய இரண்டையும் சமாந்திரமாக முன்னேடுக்கும் படி அரசை கோருகிறோம் எனவும் மகோகணேசன் அமெரிக்க தூதுவரிடம் கூறியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா வருவாய், ஏற்றுமதி ஆகிய விவகாரங்கள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை தெரிவித்து கொண்டோம் என்றும் மகோகணேசன் இந்த சந்திப்பு குறித்து கூறியுள்ளார்.