மாணவர்கள் சந்திப்பு
இன்று 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் இந்த நிகழ்வை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த விழாவில் விஜய் பேசியது குறித்து பார்க்கலாம்.
விஜய் பேச்சு
“வாழ்க்கையில் என்னவாக போகிறோம் என்கிற தெளிவான எண்ணம் சிலருக்கு இருக்கும். சிலருக்கோ வாழ்க்கையில் அடுத்து என்ன என்பதில் முடிவெடுப்பதில் சிரமம் இருக்கும்.
அப்படியானவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்.
எல்லா துறையுமே நல்ல துறைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் கடினமாக உழையுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.
நமக்கு இப்போதைய தேவை, நல்ல தலைவர்கள்தான். தலைவர்கள் என்றால் அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் தலைமையிடத்துக்கு வருவதையும்தான் சொல்கிறேன்.
படிக்கும்போதே நீங்கள் மறைமுகமாக அரசியலை தெரிந்துகொள்ள முடியும். செய்தித்தாள்களை படியுங்கள். ஒரு செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக வரும் சம்பவம் இன்னொரு செய்தித்தாளில் கடைசிப்பக்கத்தில் கூட வராது. செய்தி என்பது வேறு. கருத்து என்பது வேறு என்பதை அதன் மூலம் நீங்கள் உணர முடியும்.
நமக்கு தான் சுயக்கட்டுப்பாடு வேண்டும். போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது அரசின் கடமை. ஆனால், ஆளும் அரசு அதனை தவற விட்டுவிட்டார்கள் என்பதை பற்றியெல்லாம் நான் பேச வரவில்லை அதற்கான மேடையும் இது இல்லை.
அரசாங்கத்தை விட நமது வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்”. மேலும் “Say NO to Temporary Pleasures, Say NO to Drugs” என்ற உறுதி மொழியும் மாணவர்களை எடுக்க வைத்தார்.
இறுதியாக பேசிய விஜய் “Success is Never Ending.. Failure is Never Final” என சொல்லி தனது உரையை நிறைவு செய்தார்