புரோவிடன்ஸ்: ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சரிந்த நியூசிலாந்து அணி 84 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வெஸ்ட் இண்டீசின் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சி’ பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
குர்பாஸ் அரைசதம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பிரேஸ்வெல் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட குர்பாஸ், 40 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்த போது ஹென்றி ‘வேகத்தில்’ இப்ராஹிம் (44) போல்டானார். அஸ்மதுல்லா ஒமர்ஜாய் (22) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் ரஷித் கான் (6) ‘ரன்-அவுட்’ ஆனார். குர்பாஸ் (80 ரன், 5 சிக்சர், 5 பவுண்டரி) நம்பிக்கை தந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் பவுல்ட், ஹென்றி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
விக்கெட் சரிவு
சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் பவுலர்கள் தொல்லை தந்தனர். பரூக்கி ‘வேகத்தில்’ ஆலன் (0), கான்வே (8), டேரில் மிட்செல் (5) வெளியேறினர். ரஷித் கான் ‘சுழலில்’ கேப்டன் வில்லியம்சன் (9), சாப்மேன் (4), பிரேஸ்வெல் (4) சிக்கினர். முகமது நபி பந்தில் பிலிப்ஸ் (18), சான்ட்னர் (4) அவுட்டாகினர். ஹென்றி (12), பெர்குசன் (2) நிலைக்கவில்லை.
நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 75 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
குறைந்தபட்ச ஸ்கோர்
‘டி-20’ உலக கோப்பையில் நியூசிலாந்து அணி, தனது 2வது குறைந்தபட்ச ஸ்கோரை (75/10) பெற்றது. ஏற்கனவே இலங்கைக்கு எதிராக 60 ரன்னுக்கு (2014, இடம்: சாட்டோகிராம்) சுருண்டது.
அதிக ரன் வித்தியாசம்
‘டி-20’ உலக கோப்பை அரங்கில் நியூசிலாந்து அணி அதிக ரன் வித்தியாசத்தில் (84) தனது மோசமான தோல்வியை பெற்றது. இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 59 ரன் வித்தியாசத்தில் (2014, இடம்: சாட்டோகிராம்) வீழ்ந்தது.
முதன்முறை
சர்வதேச அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான். இதுவரை 5 போட்டியில் மோதின. இதில் நியூசிலாந்து 4 (3 ஒருநாள், ஒரு ‘டி-20’) ஆப்கானிஸ்தான் ஒரு ‘டி-20’யில் வென்றன.
ரோகித்-கோலி சாதனை சமன்
ஆப்கானிஸ்தானின் குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஜோடி, ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் தொடர்ச்சியாக 2 போட்டியில், 100 ரன்களுக்கு மேல் ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்த 2வது ஜோடியானது. உகாண்டாவுக்கு எதிராக இந்த ஜோடி 154 ரன் சேர்த்திருந்தது. ஏற்கனவே 2014ல் இந்தியாவின் ரோகித்-கோலி ஜோடி இப்படி சாதித்திருந்தது.
ரஷித் கான் அபாரம்
‘சுழலில்’ அசத்திய ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (4/17), ‘டி-20’ உலக கோப்பை தொடரில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த கேப்டன் ஆனார். இதற்கு முன் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி (4/20, எதிர்: இந்தியா, 2007), ஓமனின் ஜீஷான் மக்சோத் (4/20, எதிர்: பப்புவா நியூ கினியா, 2021) இருந்தனர்.