Wednesday, September 11, 2024
Homeவிளையாட்டு'டி-20' உலக கோப்பையில் இன்று மோதல்

‘டி-20’ உலக கோப்பையில் இன்று மோதல்


நியூயார்க்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று நியூயார்க் எய்சன்ஹவர் பார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வலுவான பேட்டிங்

இந்திய அணியை பொறுத்தவரை அயர்லாந்தை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. துவக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா, கோலி ரன் மழை பொழியலாம். மூன்றாவது இடத்தில் ரிஷாப் பன்ட் களமிறங்குவார். சூர்யகுமார், ‘ஆல்-ரவுண்டர்கள்’ ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா என பேட்டிங் படை வலுவாக உள்ளது.
‘வேகத்தில்’ மிரட்ட பும்ரா, அர்ஷ்தீப், சிராஜ் உள்ளனர். ‘ஆல்-ரவுண்டர்’ பாண்ட்யாவும் கைகொடுப்பார். அயர்லாந்துக்கு எதிராக இடது கை மணிக்கட்டு ‘ஸ்பின்னர்’ குல்தீப் இடம் பெறவில்லை. பாபர் போன்ற பாகிஸ்தான் வீரர்களை சமாளிக்க, இன்று குல்தீப் வாய்ப்பு பெறலாம். அக்சர் படேல் நீக்கப்படலாம். பதட்டமான இப்போட்டியில் இந்திய வீரர்கள் ‘கூலாக’ செயல்பட்டு சாதிக்க வேண்டும்.

அதிர்ச்சியில் மீளுமா

பாகிஸ்தானை பொறுத்தவரை அமெரிக்காவிடம் ‘சூப்பர் ஓவரில்’ தோற்ற அதிர்ச்சியில் உள்ளது. இப்போட்டி முடிந்ததும் டல்லாசில் இருந்து உடனடியாக நியூயார்க் வந்தது. இதனால் நசாவ் மைதான சூழ்நிலையை அறிந்து கொள்ள அவகாசம் கிடைக்கவில்லை. இது பாதகமான விஷயம். இந்தியாவுக்கு எதிராக தோற்றால், தொடரில் இருந்து வெளியேற நேரிடும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராக தங்களது பவுலர்கள் சொதப்பியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறினார். இவரது பேட்டிங்கும் மந்தமாகவே இருந்தது. 43 பந்தில் 44 ரன் தான் எடுத்தார். இன்று ரிஸ்வான், பகர் ஜமான், ஷதாப் கான் உள்ளிட்டோர் பொறுப்பாக ஆட முயற்சிக்கலாம். ‘வேகத்தில்’ ஷாகீன் ஷா அப்ரிதி கைகொடுக்கலாம்.

அச்சுறுத்தும் ஆடுகளம்

புதிய நசாவ் கிரிக்கெட் மைதான ஆடுகளம் குறித்து அதிகம் விமர்சிக்கப்படுகிறது. ‘டிராப்-இன்-பிட்ச்’ என்பதால், பந்துகள் அதிகம் ‘பவுன்ஸ்’ ஆகின்றன. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா (கை), ரிஷாப் பன்ட் (முழங்கை) காயமடைந்தனர். ஆடுகளம் இன்னும் ‘செட்’ ஆகவில்லை. ரோகித் சர்மா கூறுகையில்,”ஆடுகளம் எப்படி இருக்கும் என தெரியவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப தயாராகியுள்ளோம். இன்று விளையாடும் 11 இந்திய வீரர்களும் அசத்த வேண்டும்,”என்றார்.

பலத்த பாதுகாப்பு

இந்தியா-பாக்., போட்டிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கவராதிகள் மிரட்டல் விடுத்திருப்பதால், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நசாவ் கவுன்டி போலீஸ் கமிஷனர் பேட்ரிக் ரைடர் கூறுகையில்,”இங்கு ஒரு முறை அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புக்கு நிகராக, இப்போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும். ‘ஸ்னைபர்’ படை வீரர்கள், எப்.பி.ஐ., அதிகாரிகள், புலனாய்வு பிரிவினர், எல்லை பாதுகாப்பு படையினர் என பெரும் பட்டாளமே பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்,” என்றார்.

இதுவரை இவ்விரு அணிகள்

‘டி-20’ உலக கோப்பை அரங்கில் இரு அணிகளும் 7 முறை மோதின. இதில் இந்தியா 5, பாகிஸ்தான் ஒரு போட்டியில் வென்றன. ‘டை’ ஆன ஒரு போட்டியில் (2007), இந்தியா ‘பவுல் அவுட்’ முறையில் வென்றது.
* சர்வதேச ‘டி-20’ அரங்கில் இவ்விரு அணிகள் 12 முறை மோதின. இதில் இந்தியா 8, பாகிஸ்தான் 3ல் வெற்றி பெற்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது.

கோலி ‘488’

இவ்விரு அணிகள் மோதிய சர்வதேச ‘டி-20’ போட்டியில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர், 10 போட்டியில், 5 அரைசதம் உட்பட 488 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (197 ரன், 4 போட்டி) உள்ளார்.* ‘டி-20’ உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் கோலி, அதிகபட்சமாக 308 ரன் குவித்துள்ளார். பாகிஸ்தானின் சோயப் மாலிக், இந்தியாவுக்கு எதிராக 100 ரன் எடுத்துள்ளார்.

அதிக விக்கெட்

இவ்விரு அணிகள் மோதிய சர்வதேச ‘டி-20’ போட்டியில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், பாகிஸ்தானின் உமர் குல் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். மூவரும் தலா 11 விக்கெட் சாய்த்துள்ளனர்.

* ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் இர்பான் பதான், அதிகபட்சமாக 6 விக்கெட் சாய்த்தார். பாகிஸ்தானின் முகமது ஆசிப், இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

இந்தியா ‘192’

சர்வதேச ‘டி-20’ அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அதிகபட்சமாக 192/5 ரன் (2012, இடம்: ஆமதாபாத்) குவித்தது.

* இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 182/5 ரன் (2022, இடம்: துபாய்) விளாசியது.

குறைந்தபட்ச ஸ்கோர்

மிர்புரில் 2016ல் நடந்த போட்டியில் 83 ரன்னுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, சர்வதேச ‘டி-20’ அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்த ஸ்கோரை பெற்றது.

* பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி குறைந்தபட்சமாக 133/9 ரன் (2012, இடம்: பெங்களூரு) எடுத்திருந்தது.

யாருக்கு வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் முன்னாள் வீரர் கெய்ல் கூறுகையில்,” இந்தியா போன்ற அணியுடன் விளையாடுவது சவாலானது. உலக கோப்பை தொடரில் இந்த இரு அணிகள் மோதலை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்திய ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது,” என்றார்.

துவக்கம் எப்போது

இந்திய நேரப்படி இன்று இரவு 8:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. இது, அமெரிக்க நேரப்படி காலை 10:30 மணியாக இருக்கும்.

மழை வருமா

நியூயார்க் நேரப்படி காலை 10:00 மணிக்கு மழை வர 44 சதவீதம் வாய்ப்புள்ளதால், போட்டி துவங்க தாமதம் ஆகலாம். 11:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டமாக காணப்படும்.

இந்தியா

ரோகித் சர்மா (கேப்டன்), கோலி, ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ், சகால், குல்தீப், ஜெய்ஸ்வால்.

பாகிஸ்தான்

பாபர் ஆசம் (கேப்டன்), ஆசம் கான், பகர் ஜமான், இப்திகார், ரிஸ்வான், சயிம் அயுப், உஸ்மான் கான், இமாத் வாசிம், ஷதாப் கான், அப்பாஸ் அப்ரிதி, அப்ரார் அகமது, நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிதி.

வினாடிக்கு ரூ. 5 லட்சம்

இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் போது ‘டிவி’யில் ஒளிபரப்பாகும் விளம்பரத்துக்கு ஒரு வினாடிக்கு ரூ. 4– 5 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 வினாடி விளம்பரத்துக்கு ரூ. 40- 50 லட்சம் வருமானம் கிடைக்கும்.

ஒரு டிக்கெட் ரூ. 8.4 லட்சம்

நியூயார்க் மைதானத்தில் 34,000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். பிரிமியர் கிளப் பகுதியில், ஒரு டிக்கெட் விலை ரூ. 2.08- ரூ. 8.4 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் ஒரு டிக்கெட் ரூ. 1.46 கோடிக்கு விற்கப்பட்டதாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments