நியூயார்க்: கனடா அணி 12 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி தந்தது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில், உலகின் ‘நம்பர்-11’ அயர்லாந்து அணி, 23வது இடத்தில் உள்ள கனடாவை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து கேப்டன் ஸ்டிர்லிங், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
யங் அசத்தல்: கனடா அணிக்கு நவ்னீத் தலிவால் (6), தில்பிரீத் பஜ்வா (7) ஏமாற்றினர். கிரெய்க் யங் பந்தில் ஆரோன் ஜான்சன் (14), பர்கத் சிங் (18) அவுட்டானார். யங் வீசிய 13வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஸ்ரேயாஸ் மொவ்வா. மறுமுனையில் அசத்திய நிக்கோலஸ் கிர்டன், யங் வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 18 ரன் கிடைத்தன. ஐந்தாவது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்த போது மெக்கார்த்தி பந்தில் கிர்டன் (49) வெளியேறினார். மொவ்வா (37) ‘ரன் அவுட்’ ஆனார்.
கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது. கேப்டன் சாத் பின் ஜாபர் (1) அவுட்டாகாமல் இருந்தார். அயர்லாந்து சார்பில் கிரெய்க் யங், மெக்கார்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
‘டாப்-ஆர்டர்’ சரிவு: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிர்லிங் (9) ஏமாற்றினார். பால்பிர்னி (17) ஆறுதல் தந்தார். ஹாரி டெக்டர் (7), லார்கன் டக்கர் (10), கர்டிஸ் கேம்பர் (4), டெலானி (3) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர் ஜோடி ஆறுதல் தந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. கோர்டன் பந்துவீசினார். முதல் பந்தை வீணடித்த மார்க் அடைர் (34), 2வது பந்தில் அவுட்டானார். அடுத்த 4 பந்தில் 4 ரன் கிடைத்தது. அயர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ‘டி-20’ உலக கோப்பையில் கனடாவுக்கு முதல் வெற்றி கிடைத்தது. டாக்ரெல் (30), மெக்கார்த்தி (2) அவுட்டாகாமல் இருந்தனர். கனடா சார்பில் கோர்டன், ஹெய்லிகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.